சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முதலமைச்சர் விஜய் மற்றும் கரூர் நிகழ்வுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசியல் களம் தற்போது இந்த விவகாரத்தால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இது குறித்து பேசிய அவர் "கடந்த தேர்தலில் செத்த பாம்பை ஆட்டிக்கொண்டிருந்தோம், அந்த கவனச்சிதறலில் கருநாகம் உள்ளே புகுந்துவிட்டது," என்று முதலமைச்சர் விஜயை ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். மேலும், விஜய் தொடர்ந்து இது போன்ற தவறான அரசியல் பாதையில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே திரட்டி உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடமும், சிபிஐ (CBI) அமைப்பிடமும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிறர் கொடுத்த வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு, கடந்த 4-ம் தேதி ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய், கொளத்தூர் பகுதியில் "கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்" என மிகவும் கீழ்த்தரமாகப் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுத்த அவர், "அதிமுகவினர் சாப்பிட்டுப் போட்ட எச்சிலைத் தான் தற்போதுள்ள அரசு சேர்த்துக்கொண்டிருக்கிறது" என்ற ரீதியில் அதிமுகவினர் கருத்தை முன்வைத்தார்.
கரூர் பகுதியில் கோயில் நிலத்தை ஏழைகள் குடியிருப்புக்குத் தருவதாக விஜய் பத்தாம் தேதி மேடையில் பேசி நாடகம் நடத்தியதாகவும், ஆனால் அதற்கு முன்பே ஒன்பதாம் தேதியே அதற்கான அரசாணை (GO) பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும், இது மிகப்பெரிய பித்தலாட்டம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக - விஜய் இடையேயான மோதல் தற்போது சட்டரீதியாகவும், தனிநபர் விமர்சனங்களாகவும் உருவெடுத்துள்ளது. "விஜய் இத்தகைய கீழ்த்தரமான அரசியல் பேச்சுகளைத் தொடர்ந்தால், நாங்களும் அதே பாணியில் பதில் பேச வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம்," என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.