சென்னை : சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்கினார். அவரது உரையின் போது அவையில் சில கட்டங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.
டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் பேசியபோது, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து பேரவைத் தலைவர் தலையிட்டு, முதலமைச்சரின் உரை நிறைவடைந்த பிறகு எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இருப்பினும் அவையில் தொடர்ந்து சலசலப்பு நீடித்தது.
பின்னர் எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகும் தனது பதிலுரையைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், அரசியல் விமர்சனங்கள் குறித்து நகைச்சுவையாக ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துக்கூறினார்.
வெயிலில் நின்றபடி எதையோ தேடிக்கொண்டிருந்த முதியவரை பார்த்த சிறுவன் ஒருவர், “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டதாகவும், அதற்கு அந்த முதியவர் “உன் அப்பாவைத் தேடுகிறேன்” என்று பதிலளித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சில நேரங்களில் விவாதத்துடன் தொடர்பில்லாத விஷயங்களையும் அரசியல் பேச்சுகளில் இணைத்து பேசுவதாக விமர்சித்து, அதுபோன்ற கதைகளை தன்னாலும் கூற முடியும் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் " சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதல்வராக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.