சென்னை : தனது அரசியல் வருகை மற்றும் 'திருச்சி கிழக்கு' சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் கடந்து வந்த பாதை மற்றும் தனது தாயாரின் சம்மதம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
குட்டி கதை
வீடியோவின் தொடக்கத்தில் தனக்கு மிகவும் பிடித்த "கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என்ற ஸ்லோகத்துடன் ஒரு கதையைக் குறிப்பிட்டார் லாரன்ஸ். ஒரு பெரிய பணக்காரரிடம் வேலை செய்த இருவரில், முதலாளிக்கு 'ஜால்ரா' அடிக்காமல் தனது கடமையை மட்டும் நேர்மையாகச் செய்த வேலைக்காரருக்கு அந்த முதलाளி ஒரு வீட்டைப் பரிசளித்தார். அதுபோல, நாம் கடமையைச் சரியாகச் செய்தால் அதற்கான பலனைக் கடவுள் கண்டிப்பாகக் கொடுப்பார் என்று லாரன்ஸ் விவரித்தார்.
வாழ்க்கையில் நுழைந்த அரசியல்
வீடியோவில் அவர் தான் பாட்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்வது எனத் தொண்டு நிறுவனத்தின் (Trust) மூலம் சமூக சேவை செய்து வந்ததாகக் குறிப்பிட்ட லாரன்ஸ், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதுதான் முதன்முறையாக அரசியலுக்குள் அறியாமல் நுழைந்ததாகக் கூறினார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்ணன் தன் மீது விமர்சனம் வைத்தது மற்றும் ரஜினி சார் அரசியலுக்கு வரவிருந்த போது அவருக்கு ஆதரவாக ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தான் பேசியது போன்ற நிகழ்வுகளை லாரன்ஸ் நினைவு கூர்ந்தார்.
ரஜினியின் அரசியல் பின்வாங்கலும், அம்மாவின் மறுப்பும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, லாரன்ஸ் தனது ரசிகர்களைத் திரட்டி அவருக்குப் பணியாற்றத் தயாரானார். ஆனால், அவரது அம்மா (கண்மணி), "அரசியல் ஒரு சாக்கடை, அங்குப் பணம், ஜாதி, மதம் தான் விளையாடுகிறது; அதற்குள் நீ போகக் கூடாது" என்று கூறி அரசியல் வருகைக்குக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். அம்மாவின் பேச்சை மீறாத லாரன்ஸ் அமைதியானார். பின்னர் கொரோனா காலகட்டம் வந்து ரஜினி சாரும் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.
விஜய்யின் அரசியல் வென்ற மாபெரும் வெற்றி
அதன் பிறகு தனது நண்பர் (தளபதி விஜய்) அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, லாரன்ஸ் தனது அம்மாவைச் சம்மதிக்க வைக்க முயன்றார். அப்போதும் அவரது அம்மா மறுப்பு தெரிவித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்கள் ஒரு நல்ல மனிதரை நம்பி ஓட்டுப் போட்டு, அவரது நண்பர் (விஜய்) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு அம்மாவின் மனம் மாறியுள்ளது.
அம்மாவின் நெகிழ்ச்சியான வார்த்தைகள்:
"அந்தப் பிள்ளை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஒரு நல்ல மனுஷன் வந்து நல்லது பண்ண நினைச்சா அது முடியும்ன்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சுப்பா. நீ நினைச்ச மாதிரி பண்ணு கண்ணா." என்று கூறி லாரன்ஸின் அம்மா முதல்முறையாகச் சிரித்த முகத்தோடு அரசியலுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற லாரன்ஸ், தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்தும், ஒட்டுமொத்த அரசியல் வருகை குறித்தும் மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
"அரசியலுக்கு வராமலேயே கடந்த 22 வருடங்களாக என் சொந்தப் பணத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தூங்காமல், கஷ்டப்பட்டு சொந்தப் பிள்ளைகள் போல வளர்த்துள்ளேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடமையைச் செய்துள்ளேன். தற்போது என் அம்மா எனக்குச் சம்மதம் கொடுத்துவிட்டார். இப்போது மக்களாகிய உங்களிடமும், என் ரசிகர்களிடமும் கேட்கிறேன்... நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அந்தத் தகுதி எனக்கு இருக்கிறதா? உங்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன். கமெண்ட்டில் சொல்லுங்கள்" என தெரிவித்தார்.
லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ ( லிங்க் )