சென்னை : சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற்ற ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அத்தோடு, தனது சொந்தக் கையெழுத்து மூலம் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பலகையில் கையொப்பமிட்டு இந்த முக்கிய பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய், சென்னை காமராஜர் சாலை முதல் தீவுத்திடல் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் களமிறங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை இளைஞர்களோடு இணைந்து விறுவிறுப்பாக ஓடிப் பங்கேற்றார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வருடன் இணைந்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், மரிய வில்சன் மற்றும் தமிழக அரசு உயர் செயலாளர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஓடினர். மேலும், இந்த மாரத்தான் போட்டியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களும், பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மாரத்தான் ஓட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வர் விஜய் இன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி, 6.10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து, சரியாக 6.15 மணிக்கு மாரத்தானில் ஓடத் தொடங்கி 3 கி.மீ. தூரம் வரை ஓடி அசத்தியதாகக் குறிப்பிட்டார்.
தங்களது முதல்வரைப் போலவே ஒட்டுமொத்த தமிழ்நாடும் இனி வரும் காலங்களில் மிகவும் ஆரோக்கியமாக மாறப்போகிறது என்று நெகிழ்ந்த அவர், இப்படி அதிகாலையிலேயே களத்தில் இறங்கி ஓடக்கூடிய ஒரு துடிப்பான 'யூத் முதல்வர்' இந்தியாவிலேயே வேறு எங்குமே கிடையாது என்று முதல்வர் விஜய்க்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.