சென்னை : கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பின் போது சிரித்தது சர்ச்சையாக மாறியுள்ளது. இதுகுறித்து எழுந்த கேள்விக்கு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுவதும் சரியில்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு. புதிய அரசு பொறுப்பேற்று இன்னும் பத்து நாட்கள்கூட ஆகவில்லை. தற்போது தான் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இன்று தான் புதிய ஏடிஜிபி பதவியேற்றுள்ளார். இன்னும் டிஜிபி நியமனம் கூட நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் காவல்துறையின் நிர்வாக அமைப்பை ஒழுங்குபடுத்தும் பணிகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், “ஏற்கனவே சில அதிகாரிகள் தனித்தனியாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை நாங்களே தொடர்ந்து கூறி வருகிறோம். அதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும். அதனால் சட்டம்-ஒழுங்கு முழுவதும் கெட்டுப்போய்விட்டது என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம்” என்று தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் சிரித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து பேசுவதற்கு முன்பாக அவர்கள் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட சிரிப்பை இந்த விவகாரத்துடன் இணைத்து பார்க்கக் கூடாது. காவல்துறை அதிகாரிகள் எப்போதும் முகம் சுளித்தபடி மட்டுமே இருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“ஒரு விஷயத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து பேசுவது சரியல்ல. அந்த அதிகாரிகளே இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் இதை மிகைப்படுத்தி பேசுகிறார்கள்” என்றும் வன்னி அரசு கூறினார்.
மேலும், “மக்கள் பெரும்பான்மையாக ஆதரவு அளித்து இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நல்ல நிர்வாகமும், சட்டம்-ஒழுங்கும் உறுதி செய்யப்படும். குற்றங்களை கட்டுப்படுத்தவும், காவல்துறையை ஒழுங்குபடுத்தவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.