சென்னை : அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்தபோது பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, த.வெ.க மீது எழுந்த “குதிரை பேரம்” குற்றச்சாட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
“புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆறு மாத காலத்திற்கு விமர்சனம் செய்யமாட்டோம் என்று எதிர்க்கட்சியினரே சட்டப்பேரவையில் கூறியிருந்தார்கள். அதற்குள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியல்ல” என்று செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற பேச்சு குறித்து, “அது காலம் தான் பதில் சொல்லும் விஷயம்” என குறிப்பிட்டார்.
த.வெ.க மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் “குதிரை பேரம்” குற்றச்சாட்டை மறுத்த அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எந்த குதிரை பேரமும் நடைபெறவில்லை. நாட்டுக்கே யார் குதிரை பேரம் நடத்தியது தெரியும்” என மறைமுகமாக அதிமுக தலைமையை விமர்சித்தார்.
அதிமுகவில் இருந்து பலர் வெளியேறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “யாரையும் நான் அழைத்து சேர்க்கவில்லை. அவர்களாகவே வந்தார்கள்” என்று கூறிய அவர், எஸ்.பி.வேலுமணியை மறைமுகமாக தாக்கி, “வயிற்று வலிக்காரன் கட்லெட் திரி போட்டால் வயிற்று வலி தீராது; சிகிச்சை தேவை” என கடுமையாக விமர்சித்தார்.
சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “புதிய ஆட்சி வந்திருக்கிறது. மாற்றங்களை கொண்டு வர சிறிது அவகாசம் தேவை. குற்றங்கள் நடந்த உடனேயே முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். காவல்துறை மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.
மேலும், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து பேசிய செங்கோட்டையன், “அதிமுகவின் அடிப்படை கொள்கை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் தான். ஆனால் அந்த கொள்கைகள் தற்போது காக்கப்படுகிறதா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்