சென்னை : ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக ‘நான் முதல்வன்’ திட்டம், மின்வெட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அரசிடம் விளக்கம் கோரினார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் பதிவுகள் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். இத்திட்டத்தை முடக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டிய அவர், “இந்த திட்டத்தை கைவிடுவதற்கான காரணத்தை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினையையும் அவர் சுட்டிக்காட்டினார். “முதலமைச்சர் விஜய் பிரதிநிதித்துவம் செய்யும் பெரம்பூர் தொகுதியே மின்வெட்டில் முதலிடத்தை நோக்கிச் செல்கிறது. அண்ணன் கையில் பவர் வந்தால் தமிழ்நாடு மாறும் என்று நினைத்தோம். ஆனால் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என்று மக்கள் பேசுகிறார்கள்” என விமர்சித்தார்.

மேலும், “முன்பெல்லாம் புயல், மழை போன்ற காரணங்களுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மின்சாரம் இல்லாத காரணத்திற்காக விடுமுறை அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் கூறினார். தவெக தலைமையகமான பனையூரில்கூட மின்வெட்டு ஏற்பட்டதாகவும், அங்கு வந்தவர்கள் இதுகுறித்து புலம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாகவும் உதயநிதி கேள்வி எழுப்பினார். “அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என அரசிடம் விளக்கம் கோரினார்.

அதேபோல், அரசின் கவனம் மக்கள் பிரச்சினைகளில் இல்லாமல் அரசியல் ஆள்சேர்ப்பில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “இந்த ஆட்சியின் முன்பு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அவற்றை தீர்ப்பதற்குப் பதிலாக பிற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுப்பதில்தான் முழு கவனம் செலுத்தப்படுகிறது. ஆள் பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தையும் குறிப்பிட்ட அவர், விவசாயிகளுக்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என சாடினார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய இந்த கேள்விகளும் விமர்சனங்களும் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தின.