சென்னை : தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேகதாது அணை விவகாரம் தற்போது சட்ட ரீதியான பரிசீலனையில் உள்ள நிலையில், விரிவான திட்ட அறிக்கையை மட்டும் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அப்பாற்பட்ட எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற சூழலில் பூமிபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த முயற்சிப்பது இரண்டு மாநிலங்களுக்கும் இடையே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் முயற்சி என அவர் விமர்சித்தார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கிடையே நீண்டகாலமாக நல்லுறவும் தொழில் தொடர்புகளும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் வழியே தீர்க்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கும் திட்டம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். குறிப்பாக போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றும் வகையில் தெளிவான செயல்முறை வழிகாட்டி தயாரிக்கப்படும் என்றார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு பாலியல் குற்ற வழக்குகள் சரியான முறையில் கையாளப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இனி விசாரணை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வரை ஒவ்வொரு கட்டத்திற்கும் தனித்தனி நடைமுறைகள் வகுக்கப்பட்டு, தடய அறிவியல் பரிசோதனை, மரபணு பரிசோதனை உள்ளிட்டவை விரைவாக மேற்கொள்ளப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கோவை சிறுமி கொலை வழக்கில் காவல்துறை துரிதமாக செயல்பட்டது எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறிய அமைச்சர், இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறினார்.