சென்னை : கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தும் சிறப்பு தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி நீர் உரிமை என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய பிரச்சினை என்றும், இதுபோன்ற விஷயங்களில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பேரவையில் உரையாற்றிய அவர், "அரசியல் என்பது மக்களுக்கானது. கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களின் பிரச்சினை என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் நிற்க வேண்டும். விவசாயிகளின் நலன் மற்றும் தமிழக மக்களின் உரிமையை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. நீராதாரம் என்பது வாழ்வாதாரத்தின் அடிப்படை. நதிநீர் உரிமை என்பது தமிழகத்தின் முக்கிய உரிமைகளில் ஒன்று" என்றார்.

மேலும், காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு வழங்கிய இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது ஏற்க முடியாதது என்று தெரிவித்தார்.

கர்நாடக அரசு, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலோ, ஒன்றிய அரசின் அனுமதியோ பெறாமல் தனிச்சையாக இந்த திட்டத்தை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும், அதற்கு தமிழக சட்டப்பேரவை தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்ப அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட எந்தவித ஒப்புதலையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது. காவிரிப் படுகை ஏற்கனவே நீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதியாக நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது கீழ்ப்படுகை மாநிலங்களின் நலனை பாதிக்கும் என்றும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ அல்லது அனுமதி வழங்கவோ கூடாது என்றும் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இறுதியாக, தமிழக விவசாயிகளின் நீர் உரிமையை பாதுகாக்க மாநில அரசு எடுக்கும் அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் சட்டப்பேரவை முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதலமைச்சர் விஜய், "தமிழகத்தின் உரிமை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் நாம் அனைவரும் ஒரே அணியில் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்