சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகப் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முதலமைச்சர் விஜய்க்குத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தானாக முன்வந்து வாபஸ் பெற்றுள்ளனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திமுக வழக்கறிஞர் முதலமைச்சர் விஜயைக் 'குற்றம் சாட்டப்பட்ட நபர்' என்று குறிப்பிட்டதைக் கடுமையாக மறுத்த நீதிபதிகள், "முந்தைய அரசில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராகச் சேர்க்கப்படவில்லை" என்று சுட்டிக்காட்டினர்.

மேலும், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்கு தொடர்பாக அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ கருத்துகளைத் தெரிவித்தால், அதற்கு எப்படி சிபிஐ (CBI) விசாரணையை அல்லது கருத்துரைக்கத் தடை கோர முடியும்? அதுபோன்ற சூழலில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தானே தொடர முடியும்? என்று நீதிபதிகள் திமுக தரப்பைக் கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகளின் கடுமையான கேள்விகள் மற்றும் சட்டப்பூர்வமான விளக்கங்களுக்குப் பிறகு, திமுக தரப்பு வழக்கறிஞர்கள் இந்த மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினர். இந்த வழக்கை ஏற்கனவே கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவிடமே இது தொடர்பான புகாரை அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து, இந்த மனு அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.