சென்னை : அதிமுக-விலிருந்து எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்து வருவது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார். "யாரோ ஒரு எம்.எல்.ஏ-வை பணம் கொடுத்து வற்புறுத்தி வாக்களிக்க வைப்பதுதான் உண்மையான குதிரை பேரம் (Horse Trading); ஆனால், எம்.எல்.ஏ-க்கள் தாங்களாகவே விரும்பி ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சிக்குச் செல்வது குதிரை பேரம் ஆகாது" என்று அவர் கூறியுள்ளார்.
அதிமுக மற்றும் தவெக இடையேயான விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், "அது அவர்களுக்குள் நடக்கும் கட்சி விஷயம். தவறு நடந்தால் மட்டுமே நாங்கள் பேசுவோம். பணம் கொடுத்து வாக்களிக்கச் சொல்வதுதான் சட்டப்படி குற்றம். எம்.எல்.ஏ-க்கள் சுயவிருப்பத்தோடு ராஜினாமா செய்துவிட்டுப் போவதை குதிரை பேரம் என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய அரசியல் சுதந்திரம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல் 50 நாட்கள் குறித்துப் பேசிய அவர், "கோவளம் நடந்த தேனீர் விருந்திலும் சரி, ஆட்சி நிர்வாகத்திலும் சரி, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு கூட்டணி மரியாதை மற்றும் மதிப்பைக் கட்டிக் காக்கிறோம். கூட்டணி ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்" என்று கூறியுள்ளார்.
சாதாரண மக்களிடம் கேட்டுப் பாருங்கள், ஊழல் மற்றும் லஞ்சம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்ற வார்த்தையே இல்லை என்ற நிலையை உருவாக்கியது எங்களின் 50 நாள் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. இது தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சி" என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.