சென்னை : தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விரிவான மற்றும் அதிகாரப்பூர்வ விபரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை மாநில நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டிருந்தார்.

அந்த வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் உண்மையான ஒட்டுமொத்தக் கடன் அளவு தற்பொழுது 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்றும், கடந்த 60 ஆண்டுக்கால வரலாற்றில் ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசுகளும் வாங்கிய மொத்த கடனே 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டுமே மேலும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு மொத்தக் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையான விமர்சனங்களையும் சவால்களையும் முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தங்கம் தென்னரசு, நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் புதிது அல்ல என்றும், இதற்கு முன்னதாக கடந்த 2001 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், கடந்த 2001-இல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகால நிதி நிலை விபரங்களையும், 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 15 ஆண்டுகால நிதி நிலை விபரங்களையும் முழுமையாகக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போதைய தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் வெறும் முந்தைய 5 ஆண்டுகால நிதி நிலை மட்டுமே கூறப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்றும், யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் நிதி விபரங்கள் இதில் திட்டமிட்டே சொல்லப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, அவர்களை நம்ப வைத்து ஏமாற்றித் தவெக தற்பொழுது ஆட்சிக்கு வந்துவிட்டது என்று சாடியுள்ள தங்கம் தென்னரசு, தற்பொழுது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், 'இனிமேல் எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள்' என்று கூறி, தங்களின் நிர்வாக இயலாமையை மூடி மறைக்கும் ஒரு உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நாளை வரவிருக்கும் ஆளுநர் உரையில் மக்கள் புதிய திட்டம் எதையும் எதிர்பார்த்துவிடக் கூடாது என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காகவே, ஆளுநர் உரைக்கு முன்பாகவே இந்த வெள்ளை அறிக்கை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து தவெக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பேசிய அவர், தற்போதைய தவெக ஆட்சி ஒருவேளை தங்களது 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தால், அதன் முடிவில் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்தக் கடன் அளவு 20 லட்சம் கோடி ரூபாயாகப் பாரிய அளவில் உயரும் என்பதை ஒரு சவாலாகவே சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வாங்கப்பட்ட சராசரி கடனை விட, தற்போதைய தவெக அரசு தங்களது ஆட்சியில் குறைவான கடனை வாங்கிக் காட்டினால், தான் தற்பொழுது வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகிவிடுவதாக தவெக அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.