சென்னை : நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த தீவிரமான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று மதியம் தனது அதிகாரப்பூர்வ வீடியோ விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள அவர், தனது அண்மைய செய்தியாளர் சந்திப்பில் (Press Meet) உருவான சர்ச்சை குறித்தும், தனது குடும்பத்தினர் மற்றும் அறக்கட்டளை (Trust) பிள்ளைகள் அடைந்த மனவருத்தம் குறித்தும் உணர்வுப்பூர்வமாகப் பேசியுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதிப் போட்டி குறித்துப் பேசிய ராகவா லாரன்ஸ், "நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல் பரவிய உடனே, 'அண்ணா நீங்க வாங்க.. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்கிறோம்' என்று ஏகப்பட்ட பேர் எனக்கு வாழ்த்து கூறினார்கள். நான் ஷூட்டிங் போகும் இடத்திலும், அலுவலகத்திலும் கூட பலரும் என்னை 'வாங்க எம்.எல்.ஏ சார்' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். மக்களின் இந்த அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஆனால், தர்மம் என்று ஒன்று இருக்கிறது.

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்காக அடிமட்டத்திலிருந்து உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை விடுத்து, நான் அங்குப் போய் நிற்பது எப்படி தர்மம் ஆகும்? எனவே, நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை என்பதால் நான் அரசியலுக்கே வரமாட்டேன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். அதற்காக அவசரப்படவும் வேண்டாம். எங்குச் சென்றால் மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய முடியுமோ, அந்த சரியான கட்சிக்கு நான் நிச்சயம் செல்வேன்" என்று தனது அரசியல் வருகையை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒரு வார்த்தையைச் சிலர் திட்டமிட்டுத் தவறான முறையில் சர்ச்சையாக்கி (Controversy) விட்டதாக ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். "நான் செய்தியாளர் சந்திப்பு முடிந்து வந்த உடனே, அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை அறிந்து உடனடியாக எழுத்துப்பூர்வமாக ட்விட்டரில் (X தளம்) விளக்கமளித்துவிட்டு ஷூட்டிங் சென்றுவிட்டேன். நான் ஏன் எனது மக்களைத் தப்பாக நினைக்கப் போகிறேன்? தெரு நாய் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் இருக்க வேண்டிய 'புரிதல்' பற்றித்தான் நான் பேச நினைத்தேன். நான் தவறு செய்திருந்தால் பரவாயில்லை, செய்யாத தவறுக்குச் சும்மா சும்மா பேசக் கூடாது என்றுதான் அமைதியாக இருந்தேன்" என்றார்.

ஆனால், இந்தச் சர்ச்சையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தவறான வதந்திகளைப் பரப்பியதால், தனது அறக்கட்டளையில் படித்துப் பல்வேறு இடங்களில் வேலை செய்து வரும் பிள்ளைகள் தனக்குத் போன் செய்து, 'அங்கிள், இதற்கு ஒரு வீடியோ விளக்கம் கொடுங்கள்' என்று அழுது கேட்டதாகக் குறிப்பிட்டார். வீட்டிற்குச் சென்றபோது தனது அம்மாவும் இந்தச் சம்பவத்தால் மிகவும் அப்செட் ஆகி இருந்ததைக் கண்டு திகைத்ததாகக் கூறிய லாரன்ஸ், தனது அறக்கட்டளையைச் சேர்ந்த, தனக்கு மிகவும் நெருக்கமான 'ராஜகோபால்' என்ற பையன் போனில் அழுது கேட்டுக் கொண்டதால்தான் தற்பொழுது இந்த வீடியோ பதிவை வெளியிடுவதாகக் கூறி, அந்த ராஜகோபாலைத் தனது வீடியோவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.