சென்னை : தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தேதி வாரியாக வானிலை மையம் அறிவித்துள்ள முழு விபரங்கள் இதோ..
5 மாவட்டங்களுக்குக் கனமழை அலாட்!
இன்று தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
- கனமழை பெய்யும் இடங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி.
- மிதமான மழை: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதி.
- லேசான மழை: ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வழக்கமான லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
திங்களன்று மழையின் போக்கு சற்று தென் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ) மிதமான மழை பெய்யக்கூடும்.
செவ்வாய் கிழமை முதல் மழையின் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.