சென்னை : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழையும், மற்றொரு பக்கம் வெப்பநிலை உயர்வும் ஒரே நேரத்தில் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் திடீர் கனமழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கையுடன் சேர்த்து வெப்பநிலை குறித்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி வரை வட உள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அதிகளவு தண்ணீர் குடிக்கவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வெப்பநிலை 105.8 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் காரணமாக பெருநகர் பகுதிகளில் கடும் வெப்ப அசௌகரியம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் உடல் சோர்வு, நீரிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஒருபுறம் கனமழை, மறுபுறம் வெப்ப அலை என இருவிதமான வானிலை மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிலவுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.