தஞ்சாவூர்: தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன் மகேந்திரன் வெளியிட்ட வீடியோவில், ‘இறுதி நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் கலந்துகொண்டால் என் ஆத்மா சாந்தியடையும்' என தெரிவித்திருந்தார்

இதனையடுத்து, மகேந்திரன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு மொத்தம் ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மகேந்திரன் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த மகேந்திரன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளித்துள்ளது. பல ஆண்டுகளாக கழகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெற்றவராக அவர் திகழ்ந்தார். அவரது மறைவு கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்" என்று கூறினார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப பிரிவிலும் இணைந்து பணியாற்றிய மகேந்திரன், கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விசுவாசமிக்க தொண்டர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மகேந்திரனின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அதிமுக சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், தஞ்சை கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் மொத்தம் ரூ.55 லட்சம் நிதியுதவி குடும்பத்தினருக்கு கிடைக்க உள்ளது.

அதோடு, மகேந்திரனுக்கு ஒரு வயது குழந்தை இருப்பதை குறிப்பிட்ட அவர், அந்த குழந்தை பள்ளிப் படிப்பை தொடங்கும் காலத்திலிருந்து கல்வியை முழுமையாக முடிக்கும் வரை தேவையான அனைத்து கல்விச் செலவுகளையும் அதிமுக ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

"கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் விலைமதிக்க முடியாதவர்கள். ஒரு குடும்பத்தின் மகனை நாம் இழந்துள்ளோம். அவரது குடும்பத்தினர் இன்று கதறி அழும் நிலையை பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. இனி எந்த நிர்வாகியோ, தொண்டரோ இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது" என்று உணர்ச்சிபூர்வமாக கேட்டுக்கொண்டார்.

மேலும், "ஒரு விசுவாசமிக்க தொண்டனை இழந்து நாங்கள் நிற்கிறோம். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.