சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கேரளாவில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதி, 32 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சென்னையில் அவரை சந்தித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி - சஹானா தம்பதியினர், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களாக உள்ளனர். முதலமைச்சர் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்துடன் அவர்கள் கேரளாவில் இருந்து நடைபயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்து, சுமார் 32 நாட்கள் பயணித்து அவர்கள் சென்னை வந்தடைந்தனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் புறப்பட்டுச் சென்றபோது, சாலையோரத்தில் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ரஃபி - சஹானா தம்பதியினரையும் அவர் சந்தித்தார்.
நீண்ட தூரம் நடந்து வந்து தன்னை சந்திக்க காத்திருந்த தம்பதியினரின் ஆர்வத்தை பாராட்டிய முதலமைச்சர் விஜய், அவர்களுடன் Fist Bump முறையில் கைகளைத் தொட்டு வாழ்த்து தெரிவித்தார். எதிர்பாராத இந்த சந்திப்பால் உற்சாகமடைந்த தம்பதியினர், முதலமைச்சரை நேரில் சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த சந்திப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரஃபி - சஹானா தம்பதியினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் தொடங்கிய 32 நாள் நடைபயணம், நேரடி சந்திப்புடன் நிறைவடைந்தது அந்த தம்பதியினருக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.