தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நேற்று நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் திடீரென அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆலங்குளம் மட்டுமின்றி நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள தெக்குப்பட்டி பகுதியிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், சாலையோரத்தில் நின்றிருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்கியதோடு, அங்கிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியது.
சம்பவம் தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த நிலையில், அவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதையடுத்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 சிறுவர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த இந்த கும்பல் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், திருமண விழாவுக்காக பேனர் வைப்பதில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விசாரணை முடிந்த பிறகு முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.