சென்னை : முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் தடைகளைத் தாண்டி திரைக்கு வரத் தயாராகி வரும் நிலையில், தற்போது அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி, விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் வெளியீட்டில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம், வரும் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'ஜனநாயகன்' திரைப்படம் விஜயின் கடைசிப் படம் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை அந்தப் படத்திற்கு ஒதுக்கவே திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளிவந்தால், வசூல் பாதிக்கப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜேசன் சஞ்சய்யின் 'சிக்மா' படக்குழு தனது படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தந்தையின் கடைசிப் படம் மற்றும் மகனின் முதல் இயக்கப் படம் என ஒரே காலகட்டத்தில் வெளியாவது ரசிகர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், திரையரங்கப் போட்டி மற்றும் வணிகக் காரணங்களால் 'சிக்மா' படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடமிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.