சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' (RKFI) நிறுவனத்திடம், சைபர் குற்றவாளிகள் ரூ.38 லட்சம் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் செல்போனை ஹேக் செய்துள்ள மர்ம கும்பல், அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வாட்ஸ்அப் (WhatsApp) கணக்கையும், அவரது புகைப்படம் (DP) உள்ளிட்ட விவரங்களைப் பயன்படுத்திப் போலி கணக்கை உருவாக்கியுள்ளது. அந்தப் போலி வாட்ஸ்அப் கணக்கிலிருந்து, நிறுவனத்தின் முக்கிய நபர்கள் மற்றும் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு, தயாரிப்பாளர் பேசுவது போலப் பேசி, அவசரமாக ரூ. 38 லட்சம் தேவைப்படுவதாகக் கூறி பணத்தை அனுப்பச் சொல்லியுள்ளனர்.
தங்கள் நிறுவனத்தின் பெயரையும், தயாரிப்பாளரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நடந்த இந்த மோசடி முயற்சியை உணர்ந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினர், உடனடியாக இது குறித்து சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த மோசடி முயற்சியின் பின்னணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சைபர் குற்றக்கும்பல் ஒன்று இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்களின் நெருக்கமானவர்கள் அல்லது தெரிந்த நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்அப்பில் யாராவது பணம் கேட்டால், அந்த எண்ணை நேரடியாக அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புகைப்படம் மற்றும் பெயர் சரியாக இருந்தாலும், அது போலி கணக்காக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற அந்நியர்களின் அழைப்புகள் அல்லது செய்திகளுக்குக் கவனமாகப் பதில் அளியுங்கள்.