சென்னை : தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, கிராமத்து மண்ணின் மணத்தை உலகறியச் செய்த 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த கலை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயது முதிர்ந்த காலத்திலும் சினிமா மீதான தனது காதலை அவர் கைவிடவில்லை.

அவர் இறப்பதற்கு முன் பல்வேறு பேட்டிகளிலும், சக திரையுலகினரிடமும் பகிர்ந்து கொண்ட அவரது கடைசி ஆசைகளும், சினிமா பற்றிய கவலைகளும் தற்போது வெளியாகி ரசிகர்களை எமோஷனலாக்க வைத்துள்ளது.

குஷ்புவிடம் சொன்ன அந்த நிறைவேறாத ஆசை

பாரதிராஜா இயக்கிய 'கேப்டன் மகள்' திரைப்படத்தில் நடித்தவர் நடிகை குஷ்பு. அதன் பிறகு இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு ரீதியிலான பந்தம் நீடித்தது. பாரதிராஜாவின் மறைவு குறித்து நடிகை குஷ்பு பகிர்ந்துள்ள உருக்கமான தகவலில் "பாரதிராஜா சார் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வார். 'உன்னை வச்சு 'சிகப்பு ரோஜாக்கள்' பாணியில், உனக்குச் சிவப்பு நிற ஜடை (Red Braids) அலங்காரம் செய்து ஒரு பவர்ஃபுல் படம் எடுக்க வேண்டும்' என்று கூறுவார். ஆனால், அது இப்போது நிறைவேறாத ஒரு கனவாகவே போய்விட்டது." என கூறியுள்ளார்.

அதே சமயம், தனது உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு பாரதிராஜா அளித்த ஒரு பேட்டியில், இன்றைய தலைமுறை இயக்குநர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளது இன்று அவர் மண்ணைவிட்டு மறைந்த பிறகு வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் அவர் கூறியதாவது " நான் எடுத்த படங்கள் எல்லாம் மிகக் குறைவுதான். இன்னும் நம்முடைய கிராமத்து மண்ணுக்குள் பாடப்படாத, சொல்லப்படாத ஆயிரம் காவியக் கதைகள் அப்படியே புதைந்து கிடக்கின்றன" என தெரிவித்தார்.

மேலும், இன்றைய இளைஞர்கள் தங்களது கிராமத்துச் சூழலையும், கதைகளையும் மறந்துவிடக் கூடாது. நம்முடைய உண்மையான வேர்கள் அங்குதான் இருக்கின்றன. அந்த மண்ணின் கதைகளை, மனிதர்களின் வாழ்வியலைத் தொடர்ந்து உலகிற்குச் சொல்ல யாராவது ஒருத்தர் முன்வந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியிருந்த பாரதிராஜா சினிமாவின் தற்போதைய நவீன வளர்ச்சி குறித்தும் தனது கவலையைப் பதிவு செய்திருந்தார். அதாவது, தொழில்நுட்பம் (Technology) எவ்வளவுதான் அசுர வளர்ச்சி அடைந்தாலும், திரைப்படங்களில் 'மனித உணர்வுகளுக்கு' (Human Feelings) கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கதைகளில் வணிக நோக்கத்தைத் தாண்டி 'உண்மை' இருக்க வேண்டும் என்பதைத் தனது இறுதி மூச்சு வரை அவர் வலியுறுத்தி வந்தார்.

தான் வாழும் காலம் வரை சினிமாவுக்குள்ளேயே வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த மாபெரும் கலைஞனின் சிந்தனைகளும், அவர் விட்டுச் சென்ற கிராமத்து வேர்களும் என்றும் தமிழ் திரையுலகில் அழியாமல் வாழும் என அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.