சென்னை : தென்னிந்திய சினிமாவின் 90-ஸ் காலகட்டத்து கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து கலக்கியவர். சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த பிறகு, குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ரோஜா, கடந்த 2011-ல் விஜய் நடிப்பில் வெளியான 'காவலன்' (Kaavalan) திரைப்படத்தில் நடிகை அசினுக்கு அம்மாவாக, அதாவது விஜய்க்கு மாமியாராக நடித்திருந்தார்.
இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது, நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குக் கொடுத்த 'ஷாக்' பற்றியும், அதன் பிறகு தான் எடுத்த அதிரடி முடிவு குறித்தும் ரோஜா சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், காவலன் படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, அசினோட அம்மாவா யாரு நடிக்கிறாங்கன்னு விஜய் கேட்டிருக்கார். 'ரோஜா மேடம்'னு டைரக்டர் சொன்னதும் விஜய்யால நம்பவே முடியலையாம். 'அட சான்ஸே இல்லை! அவங்க என்னோட காலகட்டத்துல டாப் ஹீரோயினா நடிச்சவங்க. அவங்க எப்படி எனக்கு மாமியாரா, அசினுக்கு அம்மாவா நடிப்பாங்க?' அப்படின்னு ரொம்பவே ஆச்சரியப்பட்டிருக்கார்.
மறுநாள் நான் ஷூட்டிங்குக்கு போனதும், விஜய் என்னை தனியா கூப்பிட்டு ரொம்ப மரியாதையா பேசினார். 'மேடம், நீங்க இப்போவும் பார்க்க அவ்ளோ அழகா இருக்கீங்க. நீங்க எப்படி இந்த அம்மா ரோலுக்கு ஓகே சொன்னீங்க?' அப்படின்னு எதார்த்தமாகக் கேட்டார்.
விஜய் கேட்ட அந்த அன்பான கேள்வி, ரோஜாவின் சினிமாப் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. இது பற்றி ரோஜா பேசுகையில், "விஜய் என்கிட்ட அப்படி கேட்ட அந்த நிமிஷம்தான் எனக்கே ஒரு நிமிஷம் தூக்கிவாரிப்போட்டது. 'நாம அவசரப்பட்டு இந்த அம்மா ரோலைத் தேர்ந்தெடுத்துட்டோமோ? ஆடியன்ஸ் நம்மை இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க?' அப்படின்னு எனக்குள்ள ஒரு மாதிரி பயம் தோணிச்சு. அவர் சொன்னதுல இருந்த நியாயம் எனக்கு அப்போதான் புரிஞ்சது." எனவும் ரோஜா தெரிவித்தார்.
விஜய் சொன்னதைப் போலவே, படம் ரிலீஸான பிறகும் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும், ரசிகர்களிடமிருந்தும் ரோஜாவுக்கு இதே கேள்விகள் தான் வந்துள்ளன. "இப்போதும் நீங்க ஹீரோயின் மாதிரி அழகாத்தானே இருக்கீங்க, ஏன் இவ்வளவு சீக்கிரம் அம்மா ரோல் பண்றீங்க?" எனப் பலரும் தொடர்ந்து கேட்கத் தொடங்கியுள்ளனர்.
எல்லாரும் இதையே சொல்லிக்கொண்டிருந்ததால், தவறான கதாபாத்திரங்களில் நடித்துத் தனது பழைய 'ஹீரோயின்' இமேஜைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்த ரோஜா, அதன்பிறகு அம்மா வேடங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார்.
சினிமாவில் வயது காரணமாகத் தனக்குக் கிடைத்த அம்மா வேடங்களைத் துணிச்சலோடு மறுத்த ரோஜா, அதே காலகட்டத்தில் ஆந்திர அரசியலில் மிகத் தீவிரமாக இறங்கினார். சினிமாவில் தன் இமேஜ் உடைந்தாலும், அரசியலில் ஒரு பவர்ஃபுல் தலைவராகவும், அமைச்சராகவும் மாறிப் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.