பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.?

Jan 17, 2024 - 06:04
 0  0
பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.?

கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை முதலில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவர்களை நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை செய்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி, பொன்முடி 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாகவும் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

தப்பித்தார் பொன்முடி.! சரணடைவதில் இருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்.!  அதன்பிறகு, டிசம்பர் 21ஆம் தேதி, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எதுவாக, சரணடைய 30 நாட்கள் காலஅவகாசம் அளிப்பதாகவும்  தீர்ப்பில் நீதிபதி ஜெயசந்திரன் கூறினார் .

இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என கடந்த ஜனவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தனிநீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையிடு வழக்கானது உச்சநீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், தற்போது பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்டுகிறது என்றும் , இந்த விலக்கு தொடருமா என்பது மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கூறுவார்கள் என தனி நீதிபதி உத்தரவிட்டார் .

இதனை தொடர்ந்து, தற்போது வெளியான தகவலின்படி, உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவானது 2 வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow