SanatanaDharma : சனாதனம் வேறு.., இந்து மதம் வேறு.! துரை வைகோ கருத்து.! 

தற்போது இந்திய அரசியல் முழுக்க பேசுபொருளாக இருப்பது சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தான். சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என அவர் கூறிய கருத்துக்கு எதிராக உதயநிதி மேல் புகார்கள், கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பல்வேறு கண்டனங்கள் எதிர்ப்புகள் வந்தாலும், தான் கூறிய கருத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் பின்வாங்கவில்லை. நேற்று திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கூட சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் மதிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் துரை வைகோ, சனாதானம் என்பது வேறு இந்து மதம் வேறு என குறிப்பிட்டு பேசினார். மேலும் அவர் கூறுகையில், இந்து மதத்திற்கு எதிரானது திராவிடம் அல்ல. இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை.

ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னர் முன்னர் ஜாதிகளை உருவாக்கி, தீண்டாமையை புகுத்தி, மக்களுக்கு இடையே பிரிவினை உண்டாக்கினார்கள். அண்ணா, பெரியார், அம்பேத்கர், வைகோ ஆகியோர் இந்து மதத்திற்கு எதிராக போராடவில்லை. அதில் உள்ள சில நடைமுறைகளை எதிர்த்து தான் போராடினார்.

ஆனால் தற்போது வடமாநிலங்களில் அமைச்சர் உதயநிதி பேசியதை அவர்கள் மொழியில் திரித்து திராவிடம் என்பது இந்துக்களுக்கான எதிரான இயக்கம் என திரித்து பேசுகிறார்கள். இந்து மத கொள்கை என்பது அன்பே சிவம் தான். அனைவரிடமும் சமமாக நடத்துவது தான் கொள்கை.

ஒரு சாமியார் உதயநிதியின் தலையை வெட்டுவேன் என்கிறார். இது தாலிபான் தீவிரவாதம் போல் தான் இறுகிறது. நான் எப்போதும் வலதுசாரி கொள்கைக்கு எதிரானவன் தான். ஜாதி, மதம் பற்றிய விவாதங்கள் வரும்போது அதனை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வைகோ பொதுச்செயலாளர் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.