இன்று பெரும்பாலானோர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. அதிகப்படியான உணவு உட்கொள்வது, சர்க்கரை, கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
உடல் எடையை பராமரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதோடு, உணவு முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாகிறது. கருப்பு கவுனி கஞ்சி உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்
கருப்பு கவுனி அரிசியில் வெள்ளை அரிசியை விட அதிக நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியை சாப்பாடு, இட்லி, தோசை, ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளில் பயன்படுத்தலாம். அந்த வகையில் இந்த பதிவில் கருப்பு கவுனி கஞ்சி செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- கருப்பு கவுனி – 1 கப்
- வெங்காயம் – 1
- பச்சைமிளகாய் – 2
- கேரட் – 1
- பூண்டு – 5 பல்
- சீரகம் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் துருவியது – ஒரு கைப்பிடி
Black kavuni kanji செய்முறை :
கருப்பு கவுனி அரிசியை முதல் நாள் இரவே இரண்டு தண்ணீரில் கழுவி ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின் மறுநாள் காலை அந்த அரிசியை நன்கு கலைந்து எடுத்து, அதனை ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து எடுத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசியை ஊறவைத்து கழுவி எடுத்த தண்ணீரில் ஒரு கப் ஊறவைத்த தண்ணீரையும், பின் மூன்று கப் தண்ணீரும் என மொத்தம் நான்கு கப் தண்ணீர் ஊற்றி அதனுள் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பூண்டு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதனை இறக்கி அதனுள் துருவிய தேங்காய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலையை ஆகியவற்றினை நறுக்கி தூவி விட வேண்டும். இப்போது சுவையான சத்தான கருப்பு கவுனி கஞ்சி தயார்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் இந்த கஞ்சியை குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.