கேன்சாஸ் சிட்டி: 2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி அல்ஜீரியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதலாவது ஹாட்ரிக் கோலை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி தனது உலகக்கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தனது 200-ஆவது சர்வதேசப் போட்டியில் களம் கண்ட மெஸ்ஸி, உலகக்கோப்பை வரலாற்றில் தனது ஆறாவது பங்கேற்பை இதன் மூலம் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலேயே மெஸ்ஸி மிக அருகிலிருந்து அடித்த கோல் ஒன்று ஆஃப்சைடு (Offside) காரணமாக மறுக்கப்பட்டது. எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே தனதுTrade-mark பாணியில் பந்தை லாவகமாகக் கடத்திச் சென்று, மைதானத்தின் எல்லைப் பகுதியிலிருந்து தனது புகழ்பெற்ற இடது காலால் உதைத்து ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். அல்ஜீரிய அணியின் கோல்கீப்பரான லூகா ஜிடேனால் இந்த அதிவேகப் பந்தைத் தடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் அடித்த பந்து கோல்கீப்பரால் தடுத்துத் திரும்பிய போது, அதை மிக எளிதாகத் தட்டிவிட்டு மெஸ்ஸி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 76-ஆவது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து தாழ்வாக உதைத்துத் தனது மூன்றாவது ஹாட்ரிக் கோலை அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.
இந்த ஹாட்ரிக் கோல் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனியின் முன்னாள் நட்சத்திர வீரர் மிரோஸ்லாவ் குளோஸின் (16 கோல்கள்) சாதனையை லியோனல் மெஸ்ஸி சமன் செய்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்பொழுது பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே 14 கோல்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
மேலும், 2005-ஆம் ஆண்டு தனது 18-ஆவது வயதில் சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய மெஸ்ஸி, 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்பொழுது அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, காயத்திலிருந்து மீண்டு வந்து படைத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை அர்ஜென்டினா ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.
அர்ஜென்டினா அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் திங்கள்கிழமை அன்று ஆஸ்திரியாவை எதிர்கொள்ளவுள்ளது.