டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனின் சர்வதேச கிரிக்கெட் பயணம் பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போதிலும், இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க அவர் நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. ஆனால், சஞ்சு சாம்சனை இன்று இந்த அளவிற்கு உலகமே போற்றும் உயரத்திற்கு கொண்டு வந்ததில் அவருடைய தந்தை சாம்சன் விஸ்வநாத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு.
தங்களது குடும்பம் டெல்லியிலிருந்து கேரளாவுக்கு இடம்பெயர (Shift) அவரது தந்தை எடுத்த அந்த ஒரு கச்சிதமான முடிவு, சஞ்சுவின் கிரிக்கெட் வாழ்க்கையின் திசையையே எப்படி மாற்றியது என்பதை அவரே தற்பொழுது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் டெல்லியிலேயே வளர்ந்து அங்கேயே கிரிக்கெட் விளையாடி வந்தார். சிறு வயது முதலே டெல்லி மாநில அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அவரது பெரும் கனவாக இருந்தது. ஆனால், டெல்லியில் இருந்த கடுமையான போட்டி காரணமாக சஞ்சு சாம்சன் பல முகாம்களுக்குச் சென்றும், மூன்று முறை மாநில அணித் தேர்வில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டார்.
அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை நினைவுகூர்ந்த சஞ்சு, மூன்றாவது முறையாகவும் தேர்வாகாமல் தனது தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பும்போது, மனவேதனையில் இருவருமே வழியெங்கும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால், வீட்டிற்குச் சென்றவுடனேயே அவரது தந்தை ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, "நாம் உடனடியாக கேரளாவுக்குச் செல்ல வேண்டும், நான் டிக்கெட் முன்பதிவு செய்கிறேன்" என்று கூறியுள்ளார். கேரளாவுக்கு இடம்பெயர்ந்த பிறகு சஞ்சுவுக்கு அங்கு தடையின்றி விளையாட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
கேரளாவுக்கு வந்த பிறகு உள்நாட்டுப் போட்டிகளில் சஞ்சு சாம்சன் காட்டிய அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், தனது முதல் சீசனிலேயே 10 இன்னிங்ஸ்களில் 206 ரன்கள் குவித்து அசத்தினார். அதற்கு அடுத்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 339 ரன்களைக் குவித்து ரன் வேட்டை நடத்தினார்.
இந்த அசாத்திய திறமையின் காரணமாகவே, கடந்த 2015-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதன் பிறகு போதிய ஃபார்ம் மற்றும் கன்சிஸ்டென்சி (Consistency) இல்லாத காரணத்தால், அவர் இந்திய அணியில் சில காலம் உள்ளேயும் வெளியேயுமாகவே இருந்து வர வேண்டியிருந்தது.
சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வரலாற்றுத் தருணம் இந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தான் அமைந்தது. தொடரின் ஆரம்பப் போட்டிகளில் அவருக்குப் பிளேயிங் லெவனில் (Playing-XI) வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சூப்பர்-8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் களம் இறங்கி 97 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
அதன் பிறகு அவர் பின்வாங்கியதே இல்லை. உலகக்கோப்பையின் மிக முக்கிய அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தலா 89 ரன்கள் குவித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றுவதற்கு மிக முக்கியப் பங்காற்றினார். இந்த அசாத்திய ஆட்டத்திற்காக 2026 உலகக்கோப்பை தொடரின் மிக உயரிய 'பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்' (Player of the Tournament) விருதையும் சஞ்சு சாம்சன் வென்று சாதனை படைத்தார்.