டெல்லி : ஐபிஎல் மற்றும் பிசிசிஐ (BCCI) மீதான தொடர் விமர்சனங்களுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கொடுத்துள்ள அதிரடிப் பதில் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஐபிஎல் தொடருக்கு வரும் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் நிதி அரசியலைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் கவாஸ்கர்.

ஐபிஎல் தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதிக்கிறது என்றும், ஐபிஎல்-க்கு முன்னுரிமை அளிக்கும் வீரர்களைக் குறை கூறியும் வரும் முன்னாள் இங்கிலாந்து மற்றும் பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களைச் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியுள்ளது கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது.

பிசிசிஐ-யை விமர்சிப்பவர்களில் பலர், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவால் கிடைக்கும் பொருளாதாரப் பலன்களை அனுபவிப்பவர்களே என்று கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "இந்திய கிரிக்கெட்டையும் பிசிசியையும் விமர்சிப்பது என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், வருமானம் என்று வரும்போது அவர்கள் பிசிசிஐ வாசலில்தான் நிற்கிறார்கள். ஏனெனில், இந்திய கிரிக்கெட்டும் இந்திய ரசிகர்களுமே அவர்களின் மிகப்பெரிய வருமான ஆதாரம்," என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல்-லை விமர்சிப்பவர்கள் மறைக்கும் ஒரு முக்கிய நிதி உண்மையை கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார். அது பற்றி பார்ப்போம்,

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு வெளிநாட்டு வீரரின் ஊதியத்தில் 10 சதவீதத் தொகையை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ வழங்கி வருகிறது. அதே போல், இது ஒவ்வொரு வாரியத்திற்கும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையாகும்.

அதனைத்தொடர்ந்து மற்ற டி20 லீக் தொடர்களோடு ஐபிஎல்-லை ஒப்பிட்ட கவாஸ்கர், "இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்' (The Hundred) தொடரிலோ அல்லது உலகின் பிற டி20 லீக்குகளிலோ விளையாடும் வீரர்களின் ஊதியத்தில் ஏதேனும் ஒரு சதவீதம் அந்தந்த நாட்டு வாரியங்களுக்குக் கொடுக்கப்படுகிறதா? நிச்சயமாக இல்லை! ஐபிஎல் மட்டுமே தனது வீரர்களின் வாரியங்களுக்குப் பெரும் பணத்தை வாரி வழங்குகிறது," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக "நண்பர்களே, சுயநினைவுக்கு வந்து யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் இந்திய கிரிக்கெட்டைக் கீழே இழுக்க முயன்றாலும், அது நிலைத்து நிற்கும். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது," என்று தனது 'மிட்-டே' (Mid-day) பத்திரிக்கைப் பத்தியில் கவாஸ்கர் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தல் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தவிர்த்து ஐபிஎல்-க்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எழுந்த விவாதங்களுக்கு, கவாஸ்கரின் இந்தத் தரவுகள் அடங்கிய பதில் ஒரு பெரிய 'செக்' வைத்துள்ளது.