வாஷிங்டன்: ஈரான் அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும், இறுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது சமூக வலைதள பதிவில் டிரம்ப் கூறியதாவது: "ஈரான் உண்மையாகவே ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும், எங்களுடன் இருக்கும் நட்பு நாடுகளுக்கும் பயனளிக்கும் நல்ல ஒப்பந்தமாக இருக்கும்" என்றார்.
மேலும், பேச்சுவார்த்தை குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சியினரையும், சில குடியரசுக் கட்சி தலைவர்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார். "வேகமாக செல்ல வேண்டும், மெதுவாக செல்ல வேண்டும், போர் தொடுக்க வேண்டும், வேண்டாம் என்று பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்கள் பேச்சுவார்த்தையை சிக்கலாக்குகின்றன. அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் இன்னும் முழுமையாக குறையவில்லை. அண்மையில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, ஈரானின் சில ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறிய நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் பயன்படுத்தும் விமான தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. சர்வதேச கடல் பகுதியில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய ராணுவ கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை புதிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அமெரிக்கா மேலும் தாக்குதல்களை மேற்கொண்டால், இதுவரை இல்லாத வகையில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்தாலும், அணு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.