வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் பகிர்ந்த உளவுத்துறை தகவல்கள், அதிபர் ட்ரம்ப்பை குறிவைத்து ஈரான் ஒரு புதிய சதி திட்டத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்த பொதுவான எச்சரிக்கைகளை விட, மிகவும் தனிப்பட்ட மற்றும் குறிப்பிட்ட (Specific plot) திட்டமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க, அதிபர் ட்ரம்ப்பைத் தொடர்ந்து குறிவைத்து வருவதாக ஈரான் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த அச்சுறுத்தல் குறித்து அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "அமெரிக்காவின் தலைவரான என்னை வீழ்த்த ஈரான் விரும்புகிறது. அவர்களின் படுகொலைப் பட்டியல்கள் அனைத்திலும் எனது பெயர் முதன்மையாக இடம்பெற்றுள்ளது. இதுவரை நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன், ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை" என்று தனது பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த உளவுத்துறைத் தகவல்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் வெளியாகியுள்ளன. இரு நாடுகளும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த புதிய எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்புச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை அல்லது ஈரான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விரிவான கருத்துகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இஸ்ரேலிய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.