சென்னை : தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 22) தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 முதல் 25 வரை

ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை தொடரும்.

ஜூன் 25-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் வட கடலோர மாவட்ட மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை

ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

ஜூன் 28-ஆம் தேதி எங்கு கனமழை?

ஜூன் 28-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.