கரூர் : கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்க, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூருக்கு வருகை தருகிறார். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளது. ஒரு பக்கம் அரசியல் ரீதியான விமர்சனங்கள் எழுந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகள் முற்றிலும் வேறாக உள்ளன.

தன்னுடைய ஒரே மகனை இந்த விபத்தில் இழந்த தாய் ஒருவர், மிகுந்த வேதனையுடனும், அதே சமயம் முதலமைச்சரின் உதவிக்கு நன்றி தெரிவித்தும் பேசியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இது குறித்து பேசிய அவர் "என் பையன் சிவில் இன்ஜினியர். என் கணவர் இறந்து 11 வருஷம் ஆச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் என் புள்ளைங்க ரெண்டு பேரையும் வளர்த்தேன். தங்கச்சிக்குக் கல்யாணம் முடிச்சு, இனிமேல் தான் நாங்க நல்லா இருக்கப் போறோம்னு நினைச்ச நேரத்துல இந்த விபத்து நடந்துருச்சு. என் மகன் இறந்ததை இன்னும் எங்களால ஏத்துக்க முடியல; வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்கான், வருவான்னு தான் இன்னமும் நினைச்சுட்டு இருக்கோம்," என வேதனையுடன் தெரிவித்தார்.

நாங்க TV, Phoneல TV எல்லாம் பார்த்தோம் ஏன் இந்த வேலை கொடுக்குறீங்கன்னு கேட்டாங்க. எல்லாரையும் எப்படி நமக்குத் தெரியாது. ஆனா என்ன மாதிரி இருக்கறவங்களுக்கு இந்த வேலை வந்து ரொம்ப, எப்படி சொல்லட்டும் நாங்க உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டோம் அவரை. நாங்க சாப்பிடற ஒவ்வொரு சோறும் இப்ப அவர் கொடுத்த காசுதான்.

என்னதானே வேலைக்குப் போனாலும் அவன் குடுக்கிற காசை வச்சுதான் நாங்க வாடகை கொடுக்கிறேன். எனக்கு யாரும் இல்ல. சாப்பிடறோம். அதை வச்சு தான் பார்த்துட்டு இருக்கோம். நான் வேலைக்குப் போறதை வச்சு அவர் குடுக்கிறதை வச்சு தான் பார்க்கிறோம். எங்க பையன் இல்லைன்னாலும் இன்னைக்கு அவர் வந்து எங்கள பாக்குறாரு. எங்க குடும்பத்தைப் பாத்துக்கிறாரு. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த வேலை கொடுத்தது. இந்த உதவிக்கு நாங்க உயிர் இருக்கிற வரைக்கும் அவருக்கு நன்றியோட இருப்போம்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.