சென்னை : அதிமுகவில் தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வழங்கிய ராஜினாமா கடிதம் சபாநாயகர் J.C.D. பிரபாகர் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்பே இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கியிருந்தார். “கடிதம் முறையாக இருந்தால் உடனடியாக ஏற்கப்படும்” என்று ஏற்கனவே சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜினாமாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா, “என் தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். கொஞ்சம் நேரம் கொடுங்கள். விரிவாக எல்லாவற்றையும் விளக்குகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “முதலமைச்சர் விஜய் அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவரை சந்திப்போம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே அதிமுகவில் 3 எம்.எல்.ஏக்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவும் அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்ட அரசியலில் இது மேலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.