கரூர் : கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பணி நியமனங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி உத்தரவிற்கு உட்பட்டே அமையும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) எதிர்மனுதாரராகச் சேர்த்து உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி (நாதக) மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கை, வருகிற ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று கரூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் 32 குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குகிறார். ஆனால் பொதுப் பணிகளில் விதிமுறைகளை மீறி அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.