சென்னை : தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை (Southwest Monsoon) தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரே நேரத்தில் இரண்டு முரண்பாடான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. நாளை தமிழகத்தின் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதே நேரத்தில், வளிமண்டலக் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 60 கிமீ வேகக் காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வெயில் 39°C முதல் 41°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.
இன்று (ஜூன் 8) திருநெல்வேலி மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜூன் 9) இந்த 7 மாவட்டங்களுடன் தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களும் சேர்ந்து மொத்தம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஜூன் 10ஆம் தேதி மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை நீடிக்கக்கூடும்.
காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். இதனால், நமக்கு வியர்வை எளிதில் காயாது. இதன் காரணமாக, 39 டிகிரி வெயில் கூட நமது உடலுக்கு 44 முதல் 45 டிகிரி செல்சியஸ் வெயில் அடிப்பது போன்ற கடுமையான புழுக்கத்தையும், உடல் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 40°C-ஐ ஒட்டி இருக்கும் என்பதால் புழுக்கம் அதிகமாக இருக்கும்.