சென்னை : தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார்.
பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மாபெரும் தலைவர்கள் வழிநடத்திய இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தையும், எங்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதினேழாவது சட்டமன்றத்தின் முதல் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்பை வழங்கிய பேரவைத் தலைவருக்கும் நன்றி,” என்றார்.
மேலும், “இந்த சட்டமன்றத்தில் 12-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் சேவை செய்வதே நம் அனைவரின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், தமிழ்நாடு எப்போதும் முன்னணி மாநிலமாகத் திகழும்,” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் விஜய், “ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கருத்து தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. குறிப்பாக, எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்,” என்று கூறியதும் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த பேரவையில் நான் பேசும் இந்த தருணத்தில், என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், கடந்த காலத்தில் என்னை வெற்றிபெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும் இந்த மன்றத்தின் வாயிலாக என் நன்றியை பதிவு செய்கிறேன்,” என்றார்.
முதல்வர் விஜயின் இந்த பேச்சு, ஆளுநர் உரை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு நேரடியான பதிலாகவும், ஆட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.