சென்னை : மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24-05-2026) சென்னை சில பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கீழே உள்ள சென்னை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பத்தூர் SIDCO தொழிற்பேட்டை பகுதியில், 1வது கிராஸ் மெயின் ரோடு, 1 மற்றும் 2வது தெருக்கள், 1 மற்றும் 2வது லேன்கள், 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், CTH சாலை, மேனாம்பேடு சாலை மற்றும் SIDCO தொழிற்பேட்டையின் வடக்கு பகுதியில் உள்ள 10 மற்றும் 11வது தெருக்கள் ஆகிய பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

அதேபோல், முகப்பேர் பகுதியில் 2வது மெயின் ரோடு, ரெட்டிப்பாளையம் மெயின் ரோடு, முகப்பேர் மெயின் ரோடு, எம்.ஜி.ஆர் சாலை பின்புற பகுதிகள் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையின் தெற்கு பகுதியிலுள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக முடிந்தால், பிற்பகல் 2 மணிக்கு முன்னரே மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை முழுவதும் திடீர் மின்தடை குறித்து மக்கள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், திட்டமிட்ட மின்தடை அறிவிப்பும் வெளியாகியுள்ளதால், நாளை இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.