கேரளம் : சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கீர்த்தனா மேனன் என்ற இளம்பெண் தனது தலையை மொட்டையடித்துக்கொள்ளும் வீடியோவை, "POV: My mom planned my marriage" (என் அம்மா என் திருமணத்தைத் திட்டமிட்டார்) என்ற தலைப்புடன் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் கட்டாயத் திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்கத்தான் கீர்த்தனா மொட்டையடித்தார் எனப் பரவலாகப் பேசத் தொடங்கினர்.
இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எனக்குத் திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை, என் குடும்பத்திலிருந்தும் எந்த அழுத்தமும் இல்லை. நான் மொட்டையடித்தது முற்றிலும் என் தனிப்பட்ட விருப்பம். எனக்கு மாற்றங்கள் (changes) என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் காலை எழுந்ததும் எனக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று தோன்றியது, அவ்வளவுதான்," என்று கூறியுள்ளார்.
தான் பதிவிட்ட கேப்ஷன் தவறான புரிதலை ஏற்படுத்தியதாகவும், இதற்கான முழு விளக்கத்தை ஏற்கனவே தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், "பெண்கள் மொட்டையடிப்பதை மக்கள் சாதாரணமாகப் பார்க்கப் பழக வேண்டும். ஒரு பெண் இதைச் செய்ததால் மட்டுமே இவ்வளவு பெரிய விவாதமாக மாறியுள்ளது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தனாவின் வீடியோவின் தாக்கம் குறையாத நிலையில், இதேபோல் குடும்ப அழுத்தம் காரணமாக மொட்டையடித்த 'காஜல்' (kajals_move_) என்பவரின் பழைய வீடியோவும் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. காஜல் தனது முடிவைப் பற்றிப் பேசுகையில், "என் தலைமுடி எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் குடும்பத்தின் கட்டாயத் திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் இதைக் செய்தேன்," என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.