ராஜஸ்தான் : மாநிலம், தௌசா (Dausa) மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 1, 2026) அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் தீப்பிடித்ததில் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 24 பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷிகேஷிலிருந்து இந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த 'ஹான்ஸ் டிராவல்ஸ்' (Hans Travels) நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து, அதிவேக நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மோதலின் வேகத்தில் இரு வாகனங்களிலும் தீப்பிடித்துக் கொண்டது. அதிவேக நெடுஞ்சாலை என்பதால், பேருந்து லாரி மீது மோதிய வேகத்தில் தீயானது பேருந்துக்குள் வேகமாகப் பரவியதால் பயணிகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகினர்.
தௌசா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் அளித்த தகவலின்படி, பேருந்து தீப்பிடித்ததில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த தலைக்காயங்களால் அதே இடத்தில் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்த 24 பயணிகளும் மீட்கப்பட்டு தௌசா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தற்பொழுது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரின் பெயர் தர்மேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் லால் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.