டெல்லி : வருகிற ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கான (Re-NEET UG 2026) கூடுதல் 15 நிமிட நேர ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, மாணவர்களின் தேர்வுச் சுமையைக் குறைக்கும் வகையில் மேலும் சில அதிரடி மற்றும் பயனுள்ள மாற்றங்களைத் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், கடந்த காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்ட சிரமங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள அந்த 3 முக்கிய மாற்றங்கள் இதோ...

நேரம் 195 நிமிடங்களாக அதிகரிப்பு!

தேர்வு முறைகேடுகளால் ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஒட்டுமொத்த நேரம் 195 நிமிடங்களாக (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போதும் போல மதியம் 2:00 மணிக்குத் தொடங்கினாலும், மாலை 5:00 மணிக்கு முடிவடைவதற்குப் பதிலாக, மாலை 5:15 மணி வரை நீடிக்கும். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது, பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்களின் சரிபார்ப்பு நடைமுறைகளால் மாணவர்களின் எழுதும் நேரம் வீணாகக் கூடாது என்பதற்காகவே இந்த கூடுதல் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அதே சமயம், இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடங்களில் வரும் கணக்கீடுகளைச் செய்வதற்கும், வரைபடங்களை வரைவதற்கும் வினாத்தாள் புத்தகத்தில் (Question Booklet) போதிய இடம் இல்லை என்பது மாணவர்களின் நீண்ட நாள் குறையாக இருந்தது.

புதிய மாற்றம்: இதனை நிவர்த்தி செய்யும் வகையில், வினாத்தாள் புத்தகத்தில் ரஃப் ஒர்க் செய்வதற்கான பக்கங்களின் எண்ணிக்கை 2-லிருந்து 4 பக்கங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி தங்களின் கணக்கீடுகளைச் செய்து பார்க்க முடியும்.

வினாத்தாள் வடிவமைப்பு மாற்றம்

வினாத்தாள் புத்தகத்தின் பக்க வடிவமைப்பில் (Booklet Layout) என்.டி.ஏ (NTA) இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.