உத்தரப் பிரதேசம் : மாநில தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் ஏற்பட்ட பயங்கர கட்டிட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த நிர்வாக நடவடிக்கைகள் தற்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

விபத்து நிகழ்ந்த கட்டிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிலேயே அனுமதியற்ற கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு வெறும் இரண்டு மாதங்களுக்குள் திரும்பப் பெறப்பட்டிருப்பது தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அலிகஞ்ச் திட்டத்தின் செக்டர்-டி பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் முதலில் 1980-ஆம் ஆண்டு விஜய் குமார் என்பவருக்கு லாட்டரி முறையில் ஒதுக்கப்பட்டது. பின்னர் 2005-ஆம் ஆண்டு அந்த சொத்து அவரும் அவரது மனைவி உஷாவும் இணைந்து பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு வீரேந்திர பிரதாப் சுக்லா மற்றும் சுரேந்திர பிரதாப் சுக்லா ஆகியோருக்கு விற்பனை செய்யப்பட்டது.

சுமார் 1,992 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்திற்கு 2014-ஆம் ஆண்டு குடியிருப்பு பயன்பாட்டிற்கான கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆய்வின் போது கட்டிடத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து லக்னோ வளர்ச்சி ஆணையம் 2016-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் மே 10, 2016 அன்று சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில், ஜூலை 5, 2016 அன்று அந்த இடிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தீ விபத்துக்குப் பிறகு காவல்துறை இந்திய தண்டனைச் சட்டத்தின் புதிய பிரிவுகளான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 110, 105, 125 மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழும், உத்தரப் பிரதேச தீயணைப்பு சேவைச் சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 10-ன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய உத்தரப் பிரதேச அரசு இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்துள்ளது. சுற்றுலா, மத மற்றும் கலாச்சாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் மற்றும் லக்னோ மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரவீன் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஏழு நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் மூலம் இடிப்பு உத்தரவு ஏன் ரத்து செய்யப்பட்டது, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா, அலட்சியம் ஏற்பட்டதா போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.