டெல்லி : நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'காக்ரோச் ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) என்ற அமைப்பு டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளது.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தட்டு மற்றும் கரண்டிகளை கையில் ஏந்தி வந்தனர். இது 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருந்த "தட்டு தட்டும்" அழைப்பை நினைவூட்டும் வகையிலும், தற்போதைய கல்வி நிர்வாகத்தை விமர்சிக்கும் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் டிப்கே, போராட்டத்திற்கு முன்பாக வெளியிட்ட வீடியோவில், "ஜந்தர் மந்தருக்கு வரும் அனைவரும் தட்டு மற்றும் கரண்டி கொண்டு வாருங்கள். மீதமுள்ள கதையை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறியிருந்தார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு
இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கை, நீட்-யுஜி 2026 தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.
ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் சமூக வலைதளங்களில் உருவான இந்த அமைப்பு, ஏற்கனவே டெல்லி, புனே, லக்னோ, அமிர்தசரஸ், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
டெலிகிராம் தடைக்கு எதிர்ப்பு
நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையையும் அபிஜித் டிப்கே விமர்சித்துள்ளார். "சாலையில் பள்ளங்கள் இருப்பதால் சாலையையே மூடுவது போலத்தான் இது இருக்கிறது. பிரச்சினையை சரி செய்யாமல் டெலிகிராமை தடை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர் தற்கொலைகள் குறித்து கவலை
பிரதமருக்கு எழுதிய திறந்த கடிதத்தில், தேர்வு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என அபிஜித் டிப்கே கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சமீப வாரங்களில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டு, மாணவர்களின் மனநலம் மற்றும் எதிர்காலம் குறித்து மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியில்லை
'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தாலும், தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் அபிஜித் டிப்கே தெரிவித்துள்ளார். "உரிமைகளை கேட்க ஒவ்வொருவரும் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்களின் குரலை அரசிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்" என்று அவர் கூறியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக அளவில் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.