சென்னை : சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் திரையங்குகளில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் அளவிற்கு இந்த படம் இருக்கும் காரணத்தால் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
2011 -ஆம் ஆண்டுவரை சூர்யாவின் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே வசூல் ரீதியாக ஒரு சாதனையை படைத்துவிடும் என்கிற வகையில், அவருடைய மார்க்கெட் இருந்தது.
குறிப்பாக 2011 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம், அவருக்கு முதல் 100 கோடி வசூலைக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு சூர்யாவின் படங்கள் சொல்லும்படி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை என்றே சொல்லலாம். சமீப காலங்களில் வெளியான படங்களும் அவரது முந்தைய கால படங்களுடன் ஒப்பிடும்போது சற்று சரிவையே சந்தித்திருந்தன.
மற்ற நடிகர்கள் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வசூல் ரீதியாக சாதனைகள் படைத்து வந்த நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் அவர் மீண்டும் தனது ஆரம்ப காலத்தைப் போல வெற்றிப் படங்களில் நடித்து ஹிட் கொடுக்க வேண்டும் என காத்திருந்தனர். அந்த காத்திருப்பை சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா திரைப்படம் நிறைவேற்றும் என்றும், உலக அளவில் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் படமும் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை.
அதைத் தொடர்ந்து வெளியான ரெட்ரோ திரைப்படம் ஓரளவு வசூலை பெற்றாலும், சூர்யாவை மீண்டும் முழுமையான வணிக நாயகனாக ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்ற நீண்டநாள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் தான் அவர், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
கருப்பு படத்தின் போஸ்டர்கள் வெளியான போதே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படம் கண்டிப்பாக பழைய சூர்யாவை மீண்டும் திரையில் கொண்டு வரும் என ரசிகர்கள் நம்பினர். அதேபோல் ஆர்.ஜே. பாலாஜியும் பிசிறு கூட தட்டாமல் தரமான கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு கொண்டாட்டப் படத்தை வழங்கியுள்ளார்.
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாடல்கள், கமர்ஷியல் நிறைந்த காட்சிகள் மற்றும் சூர்யாவை ரசிகர்கள் எந்த வகையில் பார்க்க விரும்புகிறார்களோ அதை சரியாக வெளிப்படுத்திய விதம் ஆகியவை அமைந்துள்ளன. அதேபோல் இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் சிங்கம் படத்தின் ரெபரென்ஸ் , லியோ படத்தின் குறிப்புகள் உள்ளிட்ட பல அம்சங்களை கலந்து, முழுமையான விருந்து படமாக ஆர்.ஜே. பாலாஜி உருவாக்கியுள்ளார்.
இதன் காரணமாகவே கருப்பு திரைப்படம் வசூல் ரீதியாக 300 கோடியை கடந்து, சூர்யாவின் முதல் 300 கோடி வசூல் திரைப்படமாகவும், முதல் 200 கோடி வசூல் திரைப்படமாகவும் மாறியுள்ளது. படம் இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், வரும் நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.