சென்னை : தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். திரைத்துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட இருவரின் வருகை, ஆளும் கட்சியான தவெகவின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் முன்னிலையில் மன்சூர் அலிகான் கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜயின் தலைமையைப் பாராட்டி பல்வேறு கருத்துகளை பகிர்ந்தார்.

"தவெகவின் முதுகெலும்பாக இருக்கும் அமைச்சர் ஆனந்த் தலைமையிலும், உயர்ந்த மனிதர் மற்றும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரரான அமைச்சர் ஆதவ் முன்னிலையிலும் நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். என்னை கட்சியில் இணைவதற்கு வருகிறீர்களா என்று கேட்டார்கள். பிரிந்தால்தானே மீண்டும் இணைவதற்கு? நான் ஏற்கனவே விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தேன்" என்று அவர் கூறினார்.

மேலும், "லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே 'தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய்' என்று நான் வெளிப்படையாக கூறியிருந்தேன். இன்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் புரட்சி நடந்திருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் விஜயின் கரத்தை நான் முழு மனதுடன் வலுப்படுத்துவேன்" என்றார்.

தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் மன்சூர் அலிகான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். "எனது இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழக வெற்றிக் கழகத்தில் பயணிப்பேன். இது ஒரு சாதாரண இணைவு அல்ல; மக்களுக்காக உழைக்கும் ஒரு இயக்கத்தில் நான் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், "இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்திக்க உள்ளேன். அவருடன் ஆலோசித்து, கட்சியின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்" என்றும் அவர் கூறினார்.இதே நிகழ்வில் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.