ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது - தலைமைச் செயலாளர் பேட்டி!

Dec 18, 2023 - 05:21
 0  0
ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது - தலைமைச் செயலாளர் பேட்டி!

குமரி கடல், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தென் தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்றும் தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கனமழை தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

தூத்துக்குடியில் கனமழை… அவசர உதவி எண்களை வெளியிட்டார் கனிமொழி எம்.பி!

அவரை கூறியதாவது, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் 24 மணிநேரத்தில் 95 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது. அதாவது, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மழை வெள்ள மீட்புப் பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சூலூர் விமான தளத்தில் இருந்து விமானம் மூலம் நிவாரண உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மழைநீர் வடிய சற்று தாமதம் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow