ஸ்பெயின் : கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது கடைசி உலகக்கோப்பைத் தொடரை மிக உணர்ச்சிகரமாக எதிர்கொண்டுள்ளார். நாளை (ஜூலை 7) நடைபெறவுள்ள 'ரவுண்ட் ஆஃப் 16' (Round of 16) சுற்றில், போர்ச்சுகல் அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ரொனால்டோ அளித்துள்ள பேட்டி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) டல்லாஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ பேசுகையில், "இது எனது கடைசி உலகக்கோப்பை என்பதால், இதை என்னால் முடிந்தவரை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன். அதே சமயம், நாளைய ஆட்டம் எனது உலகக்கோப்பை பயணத்தின் கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புகிறேன். அப்படி இருந்தால் தான் நீங்கள் என்னை மேலும் விமர்சிக்க முடியும்!" என்று நகைச்சுவையுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடவுள் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார், எதையும் இழக்கவில்லை. உலகக்கோப்பையை வெல்வதால் நான் பெரிய வீரராகிவிட மாட்டேன், வெல்லாவிட்டாலும் என் மதிப்பு குறைந்துவிடாது. இருப்பினும், இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்ற மிகுந்த ஆசையும் நம்பிக்கையும் உள்ளது" என்று தனது பக்குவமான மனநிலையை வெளிப்படுத்தினார்.
41 வயதான ரொனால்டோ, தனது உடல்நிலை மற்றும் ஆட்டம் குறித்துப் பேசும்போது, "வயதிற்கு ஏற்ப எனது ஆட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறேன். நான் முன்பு இருந்த அதே வீரர் இல்லை என்பதை என்னால் தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை; அது கோல் அடிக்கும் திறன். நாளை ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்திலும் நான் கோல் அடிப்பேன் என்று நம்புகிறேன்; ஒருவேளை நான் அடிக்கவில்லை என்றாலும், என் அணியில் உள்ள மற்றவர்கள் அதைச் செய்வார்கள்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
கடந்த 2006 உலகக்கோப்பையில் அரை இறுதி வரை சென்றதே போர்ச்சுகல் அணியின் சிறந்த சாதனையாக உள்ளது. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறத் துடிக்கும் போர்ச்சுகல் அணிக்கு, ஸ்பெயின் ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும். 2018 உலகக்கோப்பையில் ரொனால்டோ ஸ்பெயினுக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நாக் அவுட் சுற்றில் ரொனால்டோ தனது கடைசி ஆட்டத்தைத் தவிர்க்கப் போராடுவாரா அல்லது ஸ்பெயின் அணி அவரை உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றுமா என்பது நாளை தெரியவரும்.