பிரான்ஸ் : 2026 பிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில், ஸ்வீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé) அடித்த ஒரே கோல், கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்துள்ளது.

ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில், ஷார்ட் கார்னர் கிக் (Short cornerkick) முறையில் பந்தை ஸ்டீபன்-ஓவர் (Step-over) செய்து மிக நேர்த்தியாகக் கையாண்ட எம்பாப்பே, ஸ்வீடன் வீரர் விக்டர் கியோகெரஸை நிலைகுலைய வைத்து, கோல்கீப்பர் ஜேக்கப் விடெல் ஜெட்டர்ஸ்ட்ரோமை ஏமாற்றி அந்த அசாத்திய கோலை அடித்தார். இந்த கோலின் மூலம் அவர் உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நாக்அவுட் சுற்றில் அதிக கோல்கள்: எம்பாப்பே இதுவரை உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றுகளில் மட்டும் 9 கோல்களை அடித்து, பிரேசில் ஜாம்பவான்களான லியோனிடாஸ் மற்றும் ரொனால்டோ (தலா 8 கோல்கள்) ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒட்டுமொத்த கோல்கள்: இந்த உலகக்கோப்பையில் தனது 17-வது கோலைப் பதிவு செய்துள்ள எம்பாப்பே, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸை (16 கோல்கள்) பின்னுக்குத் தள்ளி, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது லியோனல் மெஸ்ஸி மட்டுமே 18 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். 27 வயதே ஆகும் எம்பாப்பே, தனது கரியரின் உச்சத்தில் இருப்பதால், மெஸ்ஸியின் இந்த சாதனையை இந்தத் தொடரிலேயே அல்லது எதிர்காலத்தில் மிக எளிதாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னேறிய பிரான்ஸ்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி, 20-வது நிமிடத்திலேயே ஒரு கோல் அடித்தாலும் அது ஆஃப்சைட் (Offside) என ரத்து செய்யப்பட்டது. பின்னர் 32-வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த பலமான ஷாட் கோல் போஸ்டில் பட்டுத் திரும்பியது.

தொடர்ச்சியான கடும் போராட்டத்திற்குப் பிறகு, முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் எம்பாப்பே அடித்த அந்த கோல் பிரான்ஸ் அணிக்கு வெற்றியையும், காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு (Quarter-finals) தகுதியையும் உறுதி செய்தது. இளம் வயதிலேயே கால்பந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள எம்பாப்பே, பிரான்ஸ் அணியின் வெற்றிக்கான துருப்புச் சீட்டாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.