டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக உருவெடுத்த அவருக்கு, இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரையன் டென் டோஷேட் (Ryan ten Doeschate), வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றிக் கூறும்போது, "அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தயாராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர். எனவே, வீரர்களுக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது முக்கியம். வைபவ் திறமையானவர், ஆனால் அவரும் அதே தேர்வு நடைமுறைகளை (Process) முறையாகக் கடந்துதான் வர வேண்டும்" என்று விளக்கமளித்திருந்தார்.

இதனையடுத்து, வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரவி சாஸ்திரி, மைக்கேல் வான் மற்றும் அலஸ்டர் குக் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களும் வைபவ் அயர்லாந்து தொடரிலேயே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். அதே சமயம், புஜாரா மற்றும் சபா கரீம் போன்ற முன்னாள் வீரர்கள், நீண்ட கால அனுபவம் வாய்ந்த வீரர்களை ஒதுக்கிவிட்டு, இளம் வீரர்களுக்கு அவசரப்பட்டு வாய்ப்பு அளிப்பது சரியாக இருக்காது என்று எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் ஏ.பி. டி வில்லியர்ஸ் இது குறித்து பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷியை எப்போது நீங்கள் களமிறக்கப் போகிறீர்கள்? அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்குச் சிறந்த வாய்ப்பு அயர்லாந்து தொடர்தான் என்று நான் நினைத்தேன். சர்வதேச கிரிக்கெட்டின் சூழலை உணர்ந்து கொள்ள அந்தத் தொடர் ஒரு சிறந்த தொடக்கமாக இருந்திருக்கும். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

மற்ற வீரர்களைப் போலவே இவரும் முறைப்படியான தேர்வு நடைமுறைகளை (Process) முறையாகக் கடந்துதான் வரவேண்டும் என்று ரையன் டென் டோஷேட் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டத்திற்குப் பிறகு, அவரை ஏன் தாமதிக்க வேண்டும்? சிறந்த திறமை கொண்ட இளம் வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டின் நெருக்கடியான சூழலுக்குள் (throw him into the deep end) கொண்டு சென்று, அனுபவம் பெறச் செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்." எனவும் தெரிவித்தார்.