பஞ்சாப் : இந்த சீசன் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அணி, இரண்டாம் பாதியில் தொடர்ச்சியான தோல்விகளால் முற்றிலும் சரிந்து போனது. சீசனின் தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வேற லெவலில் விளையாடியது. முதல் 7 போட்டிகளில் ஒரு தோல்வியும் இல்லாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பேட்டிங் வரிசை எதிரணிகளை திணறடித்தது. அதிரடி தொடக்க வீரர்கள், நடுப்பகுதியில் வேகமாக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன்கள் மற்றும் கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய பவுலர்கள் என முழுமையான அணியாக பஞ்சாப் தெரிந்தது.

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டாலும், தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று “இந்த முறை கோப்பை பஞ்சாப்தான்” என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் உருவாக்கியது. குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி மற்றும் அதிரடி பேட்டிங் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால், தொடரின் இரண்டாம் பாதி தொடங்கிய பிறகு பஞ்சாப் அணியின் நிலைமை முற்றிலும் மாறியது. ஆரம்பத்தில் எளிதாக வந்த வெற்றிகள், பின்னர் கைக்கே வராத நிலை ஏற்பட்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கட்டாய வெற்றி போட்டியில் பஞ்சாப் வென்றாலும், மும்பைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றதால் பஞ்சாபின் பிளே-ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில் அதிக 200+ ஸ்கோர்கள் அடித்த அணியாக பஞ்சாப் இருந்தது. அதோடு, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த அணியாகவும் சாதனை படைத்தது. டெல்லி அணிக்கு எதிராக 265 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வென்றது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 250+ ரன்கள் எடுத்த அணியாகவும் மாறியது.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சந்தித்த தோல்விக்குப் பிறகு பஞ்சாப் அணியால் மீண்டு வர முடியவில்லை. அதன் பிறகு தொடர் தோல்விகள் அணியின் நம்பிக்கையை சிதைத்தன. குறிப்பாக, தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ஆர்சிபியின் 49 ஆல் அவுட் சாதனையை கிண்டல் செய்து பஞ்சாப் அணி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியது. “அந்த பதிவுக்கு பிறகுதான் பஞ்சாபின் சரிவு தொடங்கியது” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பஞ்சாப் அணியில் சஹால், அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன், ஃபெர்குசன் போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. குறிப்பாக, பவுலர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன், பீல்டிங்கிலும் அணி மோசமாக செயல்பட்டது.

இந்த சீசனில் மட்டும் பஞ்சாப் அணி 20-க்கும் மேற்பட்ட கேட்ச்களை தவறவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு, முக்கியமான நேரத்தில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் போன்ற அதிரடி வீரர்கள் ஃபார்மை இழந்ததும் அணியை பாதித்தது.

இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் சதத்தை பதிவு செய்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றாலும், மற்ற போட்டிகளின் முடிவுகள் பஞ்சாபுக்கு சாதகமாக அமையவில்லை. இறுதியில் 15 புள்ளிகளுடன் லீக் சுற்றிலேயே அணி இந்த சீசன் வெளியேறியிருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி பல ஆண்டுகளாக கோப்பைக்காக போராடி வருகிறது. 2008ல் அரையிறுதி, 2014 மற்றும் 2025ல் ரன்னர்அப் ஆகிய நிலையில் முடித்த அந்த அணி, இந்த முறையும் “முதல் கோப்பை” கனவை நனவாக்க முடியாமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.