முல்லன்பூர்: ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது. போட்டி முடிந்ததும் ராஜஸ்தான் வீரர்கள் ஏமாற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியின் உணர்ச்சிப்பூர்வமான தருணம் ரசிகர்களை கவலைப்பட செய்தார்.

போட்டி முடிந்த பிறகு டக்அவுட்டின் ஒரு மூலையில் தனியாக அமர்ந்திருந்த வைபவ் சூர்யவன்ஷியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. முகம் முழுவதும் ஏமாற்றம் தெரிந்த நிலையில், தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியாத வருத்தம் அந்த 15 வயது சுட்டிக்குழந்தையின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்ததால் அணி நெருக்கடியில் சிக்கியது. அப்போது பொறுப்புடன் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார்.

குஜராத் பந்துவீச்சாளர்களை சிதறடித்த வைபவ், 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் இடம்பெற்றிருந்தன. சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்த அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக சதத்தை தவறவிட்டார். ஜடேஜா 45 ரன்களும், டோனோவன் ஃபெரெய்ரா 11 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்ததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.

ஆனால் 215 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் முன்னிலை வகித்தார். அதிரடியான சதம் விளாசிய அவர், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத், ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தோல்வி ராஜஸ்தான் அணியை ஏமாற்றமடையச் செய்திருந்தாலும், இந்த சீசன் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி வெளிப்படுத்திய ஆட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. வெறும் 15 வயதிலேயே 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ள அவர், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கோப்பையை வெல்ல முடியாத ஏமாற்றம் இருந்தாலும், இந்த சீசன் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகத்தில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.